வெளிநாடுகளைப் பார்த்து நம் மக்கள் ஆச்சரியப்படுவதுண்டு. பல தொழில்நுட்பத்தில் வெளிநாடுகள் முன்னேறி இருந்தாலும் அனைவரும் பொதுவாக வெளிநாட்டை பார்த்து ஆசைப்படுவது ஆச்சரியப்படுவது என்னவென்றால் அந்நாட்டின் சுத்தமான சூழ்நிலை. அதற்கு காரணம் அரசாங்கம் மட்டுமல்ல மக்களின் ஒத்துழைப்பு. மக்களின் ஒருமித்த ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எந்த ஒரு காரியத்தையும் அரசாங்கம் நிறைவேற்ற முடியும்.

நம் வீடு எந்த அளவுக்கு நாம் சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறோமோ அதே அளவுக்கு நாம் வசிக்கும் நாட்டையோ ஊரையோ நகரத்தையோ தெருவையோ நாம் சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கு இங்கே அலட்சியப் போக்கு இருக்கிறது. சுத்தம் சோறு போடும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால் இந்தியாவை சுத்தமான நாடாக மாற்ற முடியும்.
அப்படி அரசாங்கம் ஒரு முன்னெடுப்பை எடுத்து ஆணையிடும்போது அதற்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக அரசு செய்யும் நடவடிக்கைதான் அபராதங்கள் விதிப்பது. அதேபோல் தற்போது சென்னை மாநகராட்சியில் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. யாரேனும் தடை செய்யப்பட்ட பகுதியில் குப்பையை கொட்டினால் அவர்களுக்கு உடனே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

போக்குவரத்து காவலர்கள் டிஜிட்டல் எந்திரத்தை வைத்து அபராதம் வாங்குவது போல அனுமதி இல்லாத இடத்தில் கண்ட இடத்தில் குப்பை போடுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையை ஆரம்பித்திருக்கிறது. இதனால் சென்னைவாசிகள் இனி மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையேல் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
