நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கக்கன்நகர் பகுதியில் நிகழ்ந்த இந்த பயங்கர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கன்நகரைச் சேர்ந்த 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் வினி ஆண்டோ, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான 47 வயது ரவிச்சந்திரனின் மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வினி ஆண்டோவை பலமுறை எச்சரித்த போதிலும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.
காதல் விவகாரத்தால் இருவருக்கும் இடையே நீடித்து வந்த மோதல், கடந்த இரவு மீண்டும் வெடித்தது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரனும், அவரது 17 வயது மகனும் சேர்ந்து வினி ஆண்டோவை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வினி ஆண்டோவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குன்னூர் மற்றும் ஊட்டி அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருவங்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது சிறுவன் மகன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மகளின் காதல் விவகாரத்தில் தந்தையும் மகனும் சேர்ந்து இளைஞரைக் கொலை செய்துள்ள சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
