தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சத்யராஜின் ஆரம்பகால சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ஜல்லி கட்டு. அந்த படத்தில் சிவாஜியோடு இணைந்து அவர் நடித்திருப்பார். ஜல்லிக்கட்டு படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்தில் நீதிபதியே ஒரு குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு குற்றவாளிகளைக் கொலை செய்ய சொல்வார். படத்தின் இறுதியில் இருவரும் சட்டத்தில் மாட்டிக் கொள்ளாதது மாதிரி க்ளைமேக்ஸ் எடுத்திருந்தோம்.
அதைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் “எப்படி ஒரு நீதிபதியே இப்படி செய்துவிட்டு சுதந்திரமாக இருக்கலாம்” என்ற கேள்வியை எழுப்பினார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் அவர் சட்டத்தை மதித்து கைதாவது போல மாற்றினோம். இந்த படத்தைப் பார்த்துவிட்டு எம் ஜி ஆர் எங்களைப் பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.