பராசக்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே தணிக்கை சான்றிதழ் சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் 1960 காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட வரலாற்று பின்னணி கொண்டது.
படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வரலாற்று சம்பவங்கள் குறித்து தணிக்கை குழுவினர் விளக்கம் கேட்டிருந்தனர். படக்குழுவினர் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி தணிக்கை வாரியம் பிடிவாதம் காட்டியதால் படத்தின் வெளியீடு கேள்விக்குறியானது. வரலாற்று தரவுகளை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட இந்த தாமதமே படத்திற்கு சான்றிதழ் கிடைப்பதில் பெரும் தடையாக இருந்தது. அனைத்து சிக்கல்களுமே ஒரு வழியாக சுமுகமாக முடிந்த நிலையில் தற்போது பராசக்தி திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 10 நாளை திரைப்படம் வெளியாக உள்ளது.
