அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் நோக்கில், பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கப் பணம் வைத்திருப்பதை முறைப்படுத்த உயர்நீதிமன்றக் கிளை அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்கவும், இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிர்வாகச் செயல்பாடுகளைச் சீரமைக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக மாவட்ட அளவில் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஒரு முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தினசரி தங்களின் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணத்தை ‘Personal Cash Register’ (தனிநபர் ரொக்கப் பதிவேடு) என்ற பிரத்யேகப் பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். இப் பதிவேடானது ஒவ்வொரு வேலைநாளிலும் அலுவலகத் தலைவரின் சான்றொப்பம் பெற்று முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை பல அலுவலகங்களில் இப்பதிவேடு தொடர் பராமரிப்பில் இல்லாமலும், பெயரளவில் மட்டுமே வைக்கப்பட்டு முறைப்படுத்தப்படாமலும் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில், இப்பதிவேடானது வருகைப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டு, கண்காணிப்பாளரின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும். மேலும், மேலதிகாரிகள் மாதம் இருமுறை இப் பதிவேட்டை ஆய்வு செய்து அதன் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், ஊழியர்கள் தேவைக்கு அதிகமான ரொக்கப் பணத்தை அலுவலகத்திற்கு எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் வீழ்ச்சி அல்லது அலட்சியம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது இப் பதிவேடு கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், இப்புதிய நடைமுறை அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சிறந்த வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
