விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துவிட்டுச் சென்ற பிறகு, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் வரிசையாக நின்று பணம் பெறுவதற்கான டோக்கன்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டவிரோதச் செயலை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பட்டப்பகலில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ ஆதாரம் தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
