மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ப. செந்தில்செல்வனின் வெற்றியை எதிர்த்து வாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை எதிர்த்து எம்.எல்.ஏ செந்தில்செல்வன் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மனுதாரர் வாசு தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இது குறித்து வேறு யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம் எனக் கூறி 15 நாள்கள் நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது. இந்த அவகாச காலத்தில் வழக்கை வாபஸ் பெறுவதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், வாசு தொடர்ந்த தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
