தமிழக சட்டப்பேரவையில் எவ்விதக் கூட்டணிக் கட்சிகளின் தயவுமின்றி, தனிப்பெரும் சக்தியாகத் தன் சொந்தக் காலில் நிற்பதற்காக தமிழக வெற்றிழகத் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் ஒரு அதிரடி அரசியல் காயை நகர்த்தத் தொடங்கியுள்ளார். ஆட்சி நிர்வாகத்திலும் கொள்கை ரீதியான முடிவுகளிலும் கூட்டணிச் பங்காளிகளின் தலையீடு அதிகமாக இருப்பதைத் தவிர்க்க விரும்பும் தவெக தலைமை, சட்டமன்றத்தில் தனித்து அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
தற்போது காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்தத் திட்டமிட்ட அரசியல் வியூகமே மறைந்துள்ளது. காலியாக உள்ள தொகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் தவெக-வின் பலத்தை அதிகரித்து, முழுமையான சுதந்திரத்துடன் ஆட்சிப் பொறுப்பைத் தன் வசப்படுத்தவே முதல்வர் விஜய் இந்த சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
