அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் சித்தா. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நுழைந்த கன்னட அமைப்பினர் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் பிரச்சினையை சுட்டிக்காட்டி தகராறு செய்துள்ளனர். இதனால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து சித்தார்த் வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தமிழக விவசாயிகளை அழிக்க நினைக்கும் கன்னட அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் சித்தார்த்தின் பட எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் லியோ படம் கர்நாடகாவில் திரையிடப்படாது. 2026-இல் கர்நாடக மிகப்பெரிய விளைவை சந்திக்கும் என நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இணையத்தில் வெளியான ஆடியோவில் பேசுவது விஜய் இல்லை. இது அவரது குரலும் இல்லை. அந்த ஆடியோவுக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிலர் விஜய் குரலில் பேசி தவறாக இணையத்தில் அந்த ஆடியோவை பரப்பியுள்ளனர். இப்படி நடிகர் விஜய் மீது தவறான கருத்தை பரப்புவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.