தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்துள்ள சூழலில், போக்குவரத்துத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இனி ஏசி பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பயணக் கட்டணத்தை உயர்த்தாமல் விளம்பரங்கள் மூலம் வருவாயைப் பெருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இத்தகைய சூழலில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்காகப் புதிதாகப் பாடி கட்டப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களில், புதிதாகத் தயாராகும் பேருந்துகள் தவெகவின் கட்சி கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு வண்ணங்களில் காட்சிளிக்கின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “மக்களின் வரிப்பணத்தில் ஆளுங்கட்சி தனது விளம்பரத்தைச் செய்கிறதா?” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
அதேவேளையில், இந்த விமர்சனங்களுக்கு மற்றொரு தரப்பினர் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். தவெக கொடி அறிமுகமாவதற்கு முன்பே, தமிழகத்தில் பல வழித்தடங்களில் இதே போன்ற மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணக் கலவையிலான அரசுப் பேருந்துகள் இயங்கி வந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது வழக்கமான வண்ணக் கலவைதானே தவிர, கட்சி விளம்பரம் அல்ல என்றும், தேவையின்றி சர்ச்சையை உருவாக்குவதாகவும் அவர்கள் தங்களது வாதத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தை ‘திறன் தமிழ்நாடு’ என்றும், மகளிருக்கான ‘விடியல் பயணம்’ திட்டத்தை ‘மகளிர் பயணம்’ என்றும் தவெக அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தற்போது எழுந்துள்ள புதிய பேருந்துகளின் வர்ணப்பூச்சு சர்ச்சையும் தமிழக அரசியலில் கூடுதல் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
