புல்லட்டுக்குள் புகுந்த ராஜபுத்திரரின் ஆவி!!! டீசலே இல்லாமல் தானாக ஓடும் புல்லட்… ஒரே மர்மமா இருக்கேப்பா?

By Arun on சித்திரை 9, 2024

Spread the love

மாதவன் நடித்த “யாவரும் நலம்” திரைப்படத்தில் டிவிக்குள் ஆவி புகுந்தது போல ராஜஸ்தான் மாநிலத்தில் புல்லட்டுக்குள் ஆவி புகுந்த ஒரு உண்மைக் கதையைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். ஆனால் இதெல்லாம் கட்டுக்கதையாகத்தான் இருக்கும் என பகுத்தறிவை பயன்படுத்துவோர் கூறலாம். ஆனால் இது உண்மையிலேயே நடந்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில் இருந்து பாலி பகுதிக்குச் செல்லும் NH 65 நெடுஞ்சாலையில் நீங்கள் சென்றால் ஓரிடத்தில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் ஒன்று பூஜை புணஸ்காரத்தோடு நிறுத்தப்பட்டிருக்கும். அதன் அருகில் சென்றால் புல்லட்டுக்கு அருகில் ஒரு மார்பளவு சிலை ஒன்று இருக்கும். அந்த சிலை யாருடையது? இந்த புல்லட்டை ஏன் பூஜை செய்கிறார்கள்?

   

ராஜஸ்தான் மாநிலத்தின் சோட்டிலா என்ற கிராமத்தில் ஓம் சிங் ரத்தோர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜபுத்திரர்களை அவ்வூர் மக்கள் பன்னா என்று செல்லமாக அழைப்பார்கள். ஆதலால் ஓம் சிங் ரத்தோர், ஓம் பன்னா என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்டார். இவர் சொந்தமாக ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லட் ஒன்றை வைத்திருந்தார். வெளியூர் சென்றால் கூட அந்த புல்லட்டில் கெத்தாக செல்வது அவரது வழக்கமாக இருந்தது.

   

 

1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் அவர் பாங்டி என்ற ஊருக்கு தனது புல்லட்டில் சென்று நடு இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த புல்லட் சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் சென்று மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஓம் பன்னா.

போலீஸார் மேற்படி விசாரணைக்காக அந்த புல்லட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தார்கள். மறுநாள் காலை எழுந்து பார்த்தால் அந்த புல்லட்டை காணவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே வந்து திருடும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என்று காவலர்கள் ஊர் முழுக்க அந்த புல்லட்டை தேடி வந்தனர். கடைசியில் அந்த புல்லட் எங்கு இருந்தது தெரியுமா? ஆம்!

ஓம் பன்னா சாலை விபத்தில் உயிரிழந்த இடத்தில்தான் அந்த புல்லட் நின்றுகொண்டிருந்தது. “எப்படி இந்த புல்லட் இவ்வளவு தூரம் வந்தது? எவன் எடுத்துக்கொண்டு இங்கு வந்து நிறுத்தியிருக்கிறான்?” என போலீஸாருக்கு விழி பிதுங்கியது.

அதன் பின் அந்த புல்லட்டை மீண்டும் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இந்த முறை பெட்ரோல் டாங்கை காலி செய்து நிறுத்தியிருந்தார்கள். மறுநாள் காலை பார்த்தால் மீண்டும் புல்லட்டை காணவில்லை. போலீஸார் எதிர்பார்த்தபடியே ஓம் பன்னா உயிரிழந்த அதே இடத்தில்தான் புல்லட் நின்றுகொண்டிருந்தது.

ஆஹா, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று போலீஸாருக்கு புரியத் தொடங்கியது. இந்த விஷயம் ஊருக்குள் கசிய அவ்வூர் மக்கள் ஓம் பன்னாவின் ஆவிதான் புல்லட்டை ஓட்டிக்கொண்டு வந்து இங்கு நிறுத்தியிருக்கிறது என்று நம்பத்தொடங்கினார்கள்.

அதன் பின் ஓம் பன்னா புல்லட் பாபாவாக மாறினார். அந்த புல்லட்டுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையும் போடப்பட்டு பூஜையும் தொடங்கியது. அன்றில் இருந்து புல்லட் பாபாவிற்கு ஒரு சிறிய கோவில் எழுந்தது. புல்லட் பாபாவின் மார்பளவு சிலை ஒன்று நிறுவப்பட்டது. அவ்வூர் மட்டுமல்லாது ராஜஸ்தானின் அந்த குறிப்பிட்ட சாலையில் பயணம் செய்யும் பலரும் புல்லட் பாபாவின் கோவில் வந்தால் வாகனத்தை நிறுத்திவிட்டு வணங்கியப் பிறகுதான் பயணத்தை தொடர்வார்கள்.

புல்லட் பாபாவை வணங்கிவிட்டுச் சென்றால் நமக்கு விபத்து நேராது, பத்திரமாக ஊர் போய் சேரலாம் என்ற நம்பிக்கை பரவியது. பக்கத்து ஊர்களில் இருந்து பலரும் வந்து புல்லட் பாபாவை வணங்கிவிட்டுச் செல்வதை இப்போதும் பார்க்கலாம்.

இந்த புல்லட் பாபாவை குறித்து மற்றொரு அமானுஷ்ய கதையும் ஒன்று உண்டு. அதாவது ஓம் பன்னா இறந்தபிறகு அவரது குடும்பத்தினர் அந்த புல்லட்டை குஜராத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு விற்றார்களாம். ஆனால் அந்த புல்லட் மறுநாளே இரவு தானாக வெகு தூரம் பயணம் செய்து ஓம் பன்னா இறந்துகிடந்த இடத்திற்கே வந்து நின்றுகொண்டதாம். எதுக்கும் ராஜஸ்தான் பக்கம் போறவங்க புல்லட் பாபாவுக்கு ஒரு தேங்காயை உடைச்சிட்டுப் போறது நல்லதாங்கும்!!