பங்களாதேஷில் வரவிருக்கும் தியாகத் திருநாளான ஈத் அல்-அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு, உலகத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டு எருமைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் மீம்ஸ் திருவிழாவையே (Memefest) உருவாக்கியுள்ளன. தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் இந்த அபூர்வ எல்பிடோ (Albino) வகை எருமைகளைக் காண தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்த விலங்குகளின் விசித்திரமான தோற்றமும் குணாதிசயங்களும் உலகத் தலைவர்களைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகக் கூறி, மக்கள் அவற்றுடன் ஆர்வமாக செல்ஃபி மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
இதில் சுமார் 700 கிலோ எடையுள்ள ஒரு எருமைக்கு அமெரிக்க அதிபர் ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் இளஞ்சிவப்பு நிற தோலும், நெற்றியில் உள்ள வெளிர் பொன்னிற முடியும் அப்படியே டொனால்ட் டிரம்பின் தலைமுடியை நினைவுபடுத்துவதாக மக்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர். இந்த எருமையைப் பார்க்க வந்த ஒரு பெண், “இதன் முக அமைப்பும் சிகை அலங்காரமும் டொனால்ட் டிரம்பை போலவே இருக்கிறது; ஆனால், நிஜ டிரம்ப் போல இல்லாமல் இது மிகவும் சாதுவாகவும் அமைதியாகவும் இருக்கிறது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், தனது தம்பி இதன் முடியைப் பார்த்துவிட்டு விளையாட்டாக இப்பெயரை வைத்ததாகவும், இந்த ‘டிரம்ப்’ எருமை ஏற்கனவே பக்ரீத் குர்பானிக்காக விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், அதே பண்ணையில் உள்ள 750 கிலோவுக்கும் அதிக எடையுள்ள மற்றொரு எருமைக்கு இஸ்ரேல் பிரதமர் ‘பெஞ்சமின் நெதன்யாகு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரம்ப் எருமைக்கு நேர்மாறாக, இந்த நெதன்யாகு எருமை மிகவும் ஆக்ரோஷமான குணம் கொண்டதாக உள்ளது. தீவனம் வைக்கச் சென்றால் கூட சீறிக்கொண்டு முட்ட வருவதாகவும், கணிக்க முடியாத ஆபத்தான புத்தியைக் கொண்டிருப்பதாகவும் பண்ணை மேலாளர் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்களின் குணாதிசயங்களையும் தோற்றத்தையும் இந்த எருமைகளுடன் ஒப்பிட்டு இணையவாசிகள் பதிவிட்டு வரும் நகைச்சுவையான மீம்கள், தற்போது பங்களாதேஷ் தாண்டி சர்வதேச அளவிலும் நெட்டிசன்களைக் கவர்ந்து டிரெண்டாகி வருகின்றன.
