டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 27 வயதான அனில் என்ற துப்புரவுத் தொழிலாளி, அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து மற்றும் நெஞ்சில் பலமுறை கொடூரமாகக் குத்தப்பட்டுள்ளார். மெட்ரோ வேஸ்ட் என்ற மாநகராட்சி கழிவு சேகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தாக்குதலுக்குப் பிறகு நீண்ட நேரமாகச் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அனிலை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பகல் நேரத்திலேயே பணி நேரத்தில் நடந்த இந்த கொடூரக் கொலை சம்பவம், அப்பகுதியில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/IndiaToday/status/2088929985620856892/video/1
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, கொலையாளிகளைக் கண்டறிய தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வரும் காவல்துறையினர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் மற்றும் தனிப்பட்ட பகை ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
