வியட்நாமில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தியக் குடும்பத்தினர் சிலர் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் உணவக ஊழியர்களுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவர்களை நோக்கிப் பொருட்களை வீசி எறிந்து தாக்குவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உணவகத்தில் தவறாக நடந்துகொண்டதாகவும், அவனது நடத்தையை ஊழியர்கள் தட்டிக்கேட்டு ஆட்க்ஷேபனை தெரிவித்ததே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. தங்களது குழந்தையைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த இந்தியக் குடும்பத்தினர், அங்கிருந்த ஊழியர்களைத் தள்ளிவிட்டு, உணவகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, பலரும் இந்த இந்தியக் குடும்பத்தின் அநாகரீகமான நடத்தைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்நாட்டின் விதமுறைகளையும், கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்த இந்தியர்களின் பெயரைக் கெடுக்கும் விதமாக அமைந்துள்ளன என்றும் நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
