கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு பெண்ணின் மீது அவரது சொந்த மைத்துனரே காரை ஏற்றிப் படுகொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் மங்களா தேவி எனக் கண்டறியப்பட்டுள்ளார். 6 ஏக்கர் விவசாய நிலத்தின் உரிமையியல் மற்றும் சாகுபடி உரிமை தொடர்பாக இவர்களுக்கிடையே நீண்டநாட்களாகத் தகராறு நிலவி வந்த நிலையில், இந்த அநீதி நடந்துள்ளது.
மங்களா தேவி சமீபத்தில் அந்த நிலத்தை அளவீடு செய்து, வேலி அமைத்துச் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மைத்துனர் சின்னப்பகௌடா, நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த மங்களா தேவியை நோக்கித் தனது பொலேரோ காரை மிக வேகமாகவும் திட்டமிட்டும் மோதியுள்ளார். காரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிய மங்களா தேவி சம்பவ இடத்திலேயே தீவிர காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் தங்கள் கைபேசி கேமராவில் படம்பிடித்துள்ளனர். தனது தாயைக் காப்பாற்றக் கோரி மங்களா தேவியின் மகள் கதறி அழுவதும், அதைப் பொருட்படுத்தாமல் கார் மோதும் கொடூரக் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
