சென்னை மாநகராட்சியின் 2026–2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தாக்கல் செய்யப்பட்ட வரவு செல்லவு கணக்குகளின்படி, மாநகராட்சிக்கு சுமார் ரூ 1,622 கோடி வரை நிதி பற்றாக்குறை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோதாதென்று உலக வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி வங்கி மூலமாக வாங்கப்பட்ட ரூ 2,000 கோடி கடனுக்காக, ஆண்டுக்கு ரூ 95.20 கோடி வட்டி செலுத்தும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூட இயலாத நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மேயர் பிரியா மாநகராட்சி பட்ஜெட்டின் போது அறிவித்த மிகப்பெரிய 90 திட்டங்களின் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்யத் தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. ரூ 300 கோடி செலவில் திட்டமிடப்பட்ட பாலம் அமைக்கும் பணிக்கு ரூ 375 கோடி என மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது உட்படப் பல திட்டங்களில் நிதி ஒதுக்கீடு அளவுக்கு அதிகமாகக் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மூலதன நிதி வரம்பிற்கு மீறிச் செலவிடப்பட்டதே இந்த நிதிச் சிக்கலுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அரசு தற்போது மாநகராட்சியின் வரவு-செலவு கணக்குகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளதால், சென்னை மாநகராட்சி வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திட்டங்களின் கூடுதல் மதிப்பீடுகள் மற்றும் நிதி நிர்வாகத்தில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து அரசு ரீதியான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், மேயர் பிரியாவுக்குத் தலைமை இடத்திலிருந்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த மறு ஆய்வின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
