உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குருகுலத்தின் உரிமையாளர் சௌரப் மிஸ்ரா மற்றும் அவரது காதலி ஹர்ஷிதா சோனி ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சிறுவனின் உடல் கான்பூரில் உள்ள அவனது வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குருகுலத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காகச் சிறுவனை சௌரப் மிஸ்ரா கடுமையாகத் சித்திரவதை செய்தது தெரியவந்தது. சிறுவனை கைகளாலும், பெல்ட் மற்றும் தடிகளாலும் சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரது தலையைச் சுவரில் ஓங்கி மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சிறுவன் இறந்ததை அறிந்த சௌரப், உடனடியாகத் தனது காதலி ஹர்ஷிதாவை அழைத்து வரச் செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, குருகுலத்தில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஹர்ஷிதாவைக் கொண்டு அடித்து உடைத்துள்ளார். பின்னர் சிறுவனின் உடலை ரகசியமாகக் கொண்டு சென்று கான்பூரில் வீசிவிட்டுத் தப்ப முயன்றனர். தற்போது குற்றவாளிகள் இருவரும் சிக்கியுள்ள நிலையில், கல்வி கற்கும் இடத்தில் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடூரம் நாடு முழுவதும் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகிறது.
