“8% -ஆ அல்லது 25% -ஆ?”… ஸ்டாலினுக்கு செக் வைத்த விஜய்… எடப்பாடியின் தூக்கத்தைக் கெடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்…!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் கள நிலவரத்தைக் கேட்டறிந்தபோது, அதிமுக குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்திலாவது (Margin) ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை தகவல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பது இந்த ஆலோசனையின் மையப்புள்ளியாக அமைந்தது.

விஜய்யின் வாக்கு வங்கி 8 சதவீதமாக இருந்தால் அது அதிமுகவிற்குப் பின்னடைவாக அமையும் என சீனியர்கள் கணித்துள்ளனர். ஏனெனில், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளும் நடுநிலையாளர்களின் வாக்குகளுமே இந்த 8 சதவீதத்தில் அடங்கும்; இவை இயல்பாக அதிமுகவிற்கு வர வேண்டியவை. இந்த வாக்குகள் விஜய்க்குச் சென்றால் அது திமுகவிற்குச் சாதகமாக முடியும். ஆனால், விஜய்யின் வாக்கு சதவீதம் 20 முதல் 25 சதவீதமாக உயர்ந்தால், அது அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற சுவாரஸ்யமான கணக்கை அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் முன்வைத்துள்ளனர்.

   

இந்தக் கணக்கின்படி, விஜய் 25 சதவீத வாக்குகளைப் பெற்றால், அதில் அதிமுகவின் பங்கான 8 சதவீதத்தைத் தவிர மீதமுள்ள 17 சதவீத வாக்குகள் திமுக கூட்டணி மற்றும் சீமானின் கட்சியிடமிருந்துதான் பிரியும். குறிப்பாக திமுகவின் வாக்கு வங்கியில் 15 சதவீதம் வரை விஜய் சரிப்பார் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரும் என்றும், அந்த வாக்குச் சிதறல் அதிமுகவை அரியணையில் ஏற்றும் என்றும் மூத்த தலைவர்கள் விளக்கியுள்ளனர். இது எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தல் முடிவுகள் குறித்துப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்யின் தனிப்பட்ட வெற்றி வாய்ப்பு குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. விஜய்யின் வருகை அதிமுகவைப் பாதிக்கும் என்ற பொதுவான பிம்பத்திற்கு மத்தியில், அதிகப்படியான வாக்குச் சிதறல் திமுகவையே பலவீனப்படுத்தும் என்ற சீனியர்களின் இந்த அரசியல் கணக்கு, எடப்பாடி பழனிசாமியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.