காருக்குள் ஒளிந்து கொண்ட சிறுவன்… திடீரென பூட்டிய கதவு… 3 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்கப்பட்ட சோகம்… அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

திருமங்கலம் அருகே காணாமல் போன சிறுவன் காரில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அந்த கிராமத்தை சேர்ந்த சிவகாசியில் ESE மருத்துவராக பணியாற்றும் மாரிமுத்து (37) தனது காரில் அந்த கிராமத்தில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அன்று திருமங்கலம் அருகே நடுகோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் தம்பதியினர் தன்னுடைய ஏழு வயது மகன் சண்முக வேலுடன் மேலப்பட்டி கிராமத்தில் நடைபெறக்கூடிய திருவிழாவிற்கு வந்திருந்தனர். அன்று மாலை 4 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய மகனை காணவில்லை என்று ராஜசேகர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் 7 வயது சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மருத்துவர் மாரிமுத்து திருவிழா முடிந்து காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஊருக்கு செல்வதற்காக காரை திறந்த போது காருக்குள் 7 வயது சிறுவன் சண்முகவேல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

   

உடனே அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சண்முகவேல் விளையாடிக் கொண்டிருந்தபோது காரின் பின்பக்க கதவு திறந்து இருந்தது என்றும் உள்ளே சென்று ஒளிந்து விளையாடிய போது காரின் கதவு எதிர்பாராத விதமாக சண்முகவேல் பூட்டிக் கொண்டதாகவும், பிறகு அதனை திறக்க முடியாமல் தவித்ததாகவும் சண்முகவேல் சத்தம் போட்டும் கோவில் திருவிழா என்பதால் ஒலிபெருக்கி சத்தத்தில் அவருடைய சத்தம் யாருக்கும் கேட்காமல் காருக்குள் உயிரிழந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.