சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தனது தாய்மாமன் வீட்டிற்கு வந்திருந்த குழந்தைகள் இந்த விபரீதத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பலியான சிறுவன் அகிலேஷ் திவார் (15) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தர்பூசணி சாப்பிட்ட 4, 12 மற்றும் 13 வயதுடைய மற்ற மூன்று குழந்தைகளுக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலையில் வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி பழத்தை பல மணி நேரம் கழித்து மாலையில் சாப்பிட்டதே இந்த நச்சுத்தன்மைக்கு (Food Poisoning) காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜன்மேஜய மஹோபே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சுகாதாரக் குழுவினர் கிராமத்திற்குச் சென்று மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தர்பூசணி பழத்தின் மாதிரிகள் ஆய்வுக்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
