நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா புத்தூர்வயல் பகுதியைச் சேர்ந்த சாஜஹான் என்பவரின் 14 வயது மகன் மிஸ்ஹாப், பாக்கனா அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் பாக்கனா பகுதிக்கு முடிவெட்டச் சென்றுவிட்டு, மீண்டும் புத்தூர் வயலில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று திடீரென சிறுவன் மிஸ்ஹாபை கொடூரமாகத் தாக்கியது.
யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வேளையில், காட்டு யானை தாக்கி பள்ளிச் சிறுவன் உயிரிழந்த கொடூர நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
