கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கார்த்திக், பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணமான இவருக்கு, தற்போது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், விடுமுறைக்காகப் பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்குப் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டார்.
பேருந்து கரூருக்கு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கார்த்திக் மயங்கி விழுந்துள்ளார். அவர் பேருந்திலேயே விஷம் குடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், சக பயணிகள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் கரூரிலும், பின்னர் மதுரை மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். எல்லைக் காவல் பணியில் இருந்த ஒரு வீரர், கையில் குழந்தையுடன் காத்திருக்கும் மனைவியைப் பார்க்க வரும் வழியில் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எதற்காக இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து வெள்ளிச்சந்தை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
