பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கிய விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் ஜெயந்தி IAS, பொது நூலகத் துறையின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், அவரிடமிருந்த பொது நூலகத் துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
நிர்வாக நலன் மற்றும் துறை செயல்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கில், பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஷஜீவனா IAS நியமிக்கப்பட்டுள்ளார். பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாகக் கூறப்படும் சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிகாரப் பகிர்வு மற்றும் புதிய இயக்குநர் நியமனம் அரசு வட்டாரங்களிலும் பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
