வயிற்று வலி காரணமாக மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், அங்குள்ள கழிவறையில் யாருமின்றி குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக அக்குழந்தையைச் சன்னல் வழியே அவர் வெளியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடல் இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு அவளது கர்ப்பம் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்றும், சாதாரண வயிற்று வலி என்றே நினைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்வதோடு, சிறுமியின் குடும்பத்தினரிடமும் நர்சிங் ஹோம் நிர்வாகத்தினரிளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, உரிய அனுமதியின்றி செயல்படும் இதுபோன்ற நர்சிங் ஹோம்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
