தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், அதில் பணியாற்றும் ஊழியர்கள் குறைந்த ஊதியம் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு இன்றி தவித்து வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இஎஸ்ஐ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அரசாணையைப் பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய நல நிதித் திட்டத்திற்குப் பதிலாக இனி முழுமையான இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட மேலாளர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, மண்டல இஎஸ்ஐ அலுவலகங்களைத் தொடர்புகொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்குத் தனித்தனி கணக்குகளை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு பணியாளரும் விடுபடாத வகையில் அனைவரையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் ஜூலை 24-ஆம் தேதிக்குள் இதற்கான முழுமையான அறிக்கையைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவச் சிகிச்சை, விபத்து நிவாரணம், மகப்பேறு நலன் மற்றும் நோய்வாய்ப்பட்ட காலத்திற்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு இஎஸ்ஐ சலுகைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடைவார்கள்.
