சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி க்கு, தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இபிஎஸ் வருகையின் போது, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால், மண்டப வாயிலில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
அனுமதி கடிதம் இல்லாதவர்களும் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்துப் பலர் கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததில் சில தொண்டர்களுக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் காரணமாக, பொதுக்குழு நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. காவல்துறையினர் நிலைமையைச் சமாளித்து, கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
