காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, தற்போது பாஜக மேலிடத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் அவருக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. குஷ்பு உள்ளிட்ட மற்ற தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் கருதுகிறார்.
தற்போது பாஜகவில் நிலவும் இந்தச் சூழல் விஜயதாரணியை ஒரு அதிரடி முடிவை நோக்கித் தள்ளியுள்ளது. கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்று வந்தாலும், தனக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காதது அவரை வருத்தமடையச் செய்துள்ளது. குறிப்பாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான விளவங்கோட்டில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ஒருவேளை அப்போதும் சீட் மறுக்கப்பட்டால், பாஜகவில் நீடிப்பது வீண் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜகவில் தனக்கான எதிர்காலம் கேள்விக்குறியாகும் பட்சத்தில், உடனடியாகக் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இதுதான் கடைசி வாய்ப்பு’ என்ற நோக்கில் காத்திருக்கும் விஜயதாரணி, தேர்தல் நெருங்கும் வேளையில் எடுக்கப்போகும் அந்தப் பகீர் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
