திமுக ஆட்சியை வீழ்த்துவது மற்றும் முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகளை முடக்குவது என்ற நோக்கத்துடன், பாஜகவின் டெல்லி தலைமை தமிழ்நாட்டில் சில தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, பூத் கமிட்டிகளை வலுவாக்கி, ஆளும் திமுகவை தொடர்ந்து விமர்சிக்குமாறு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல அமைச்சர்களை மண்டலப் பொறுப்பாளர்களாக நியமித்து, வரவிருக்கும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த மண்டலப் பொறுப்பாளர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த பாஜக டெல்லி தலைமை ஒரு குழுவுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளது.
அமித் ஷாவின் நேரடி கண்காணிப்பில் ஒரு தனியார் ஏஜென்சி மூலம், திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களின் நகர்வுகள் குறித்த ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டு, அந்த நேரடி அறிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேஜைக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நிலுவையில் உள்ள வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவிடம் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் திமுக வின் பெரிய குடும்பத்திற்கே நெருக்கடி ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் இந்த முக்கிய திமுக அமைச்சர்களை முற்றிலுமாக முடக்குவதே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது. இதன் மூலம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்ற தொகுதிகளில் அவர்களது கவனம் சிதறும் என்றும், இது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் என்.டி.ஏ கூட்டணி ஸ்கெட்ச் போட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
