சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்த நிலையில் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் விஜயுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகின்றார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் ஓபிஎஸ். இந்நிலையில் ஓபிஎஸ்ஐ பாஜகவினர் NDA கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில் அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக உடன் சேர்ந்து ஓபிஎஸ் தேர்தலை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்ற டிடிவி தினகரன் தொகுதியை ஜனவரியில் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
