கோவாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 30 சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, அவர்களின் அந்தரங்க வீடியோக்களைக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக கவுன்சிலரின் மகனான 22 வயது சோஹம் நாயக் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் சேகரித்து வைத்திருந்த ஆபாச வீடியோக்களைத் தனது நண்பர்களிடம் காட்டியதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சோஹம் நாயக்கின் மொபைல் போன் மற்றும் இதர மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், அவற்றிலுள்ள டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரச் செயல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
