கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தல் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாஜகவின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், “பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையை அண்ணாமலை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உணர்ந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி, புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் என்றும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநிலங்களவை தேர்தலில், காலியாக உள்ள ஒரு இடத்தை மிகவும் பெருந்தன்மையுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் என்று ஜோதிமணி தெரிவித்தார். இதற்காகத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், கூட்டணிக் கட்சிகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், கட்சியின் மேலிடமும் எதிர்க்கட்சித் தலைவருமே வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும், தமிழகப் பொறுப்பாளர்கள் இதில் முடிவெடுப்பதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைப்பதாகக் குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை அமலாக்கத்துறை (ED) போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டியே பாஜக தங்களது பக்கம் சேர்த்துள்ளது என்று சாடிய ஜோதிமணி, ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை அனைத்துக் கட்சிகளும் மதிக்க வேண்டும் என்றார். அதே வேளையில், தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் சாதி, பணம் ஆகியவற்றைத் தாண்டி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
மின்சாரத்துறை மற்றும் புதிய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், தற்போதைய அரசு பொறுப்பேற்றுச் சில நாட்களே ஆவதால் அவர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று ஜோதிமணி கேட்டுக்கொண்டார். நிர்வாக ரீதியான சீர்திருத்தங்களையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொண்டு வர முதலமைச்சர் முயன்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறுவர் வன்கொடுமைகள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தார். எந்த ஆட்சியாக இருந்தாலும், வெறும் சட்டபூர்வ அணுகுமுறையால் மட்டும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றும், ஆரம்பக் கல்வி முதலே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு விரைவாகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
