“‘ஐஸ் வைக்கிறதுக்கு ஒரு எல்லை இல்லையா?’.. பதவியேற்ற உடனே பக்தி அவதாரம்.. சிவபெருமானாக மாறிய டி.கே.சிவகுமார்.. கர்நாடகாவில் வெடித்த புது அரசியல் புயல்..!!

By Muthu Mani on ஆனி 4, 2026

Spread the love

கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ளார். லோக் பவன் கண்ணாடி மாளிகையில் கெத்தாகப் பதவியேற்ற அவருக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பதவியேற்ற கையோடு மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் போன்ற அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அவருடன் சித்தராமையாவின் மகன் யதீந்திரா உட்பட 13 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், சிவகுமாரின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக அமைந்தது.

இருப்பினும், அவர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அம்மாநிலத்தில் “விஸ்வவாணி” செய்தித்தாளின் அட்டைப்பட வடிவில் ஒரு புதிய சர்ச்சை வெடித்தது. ஜூன் 3ம் தேதி வெளியான அந்த நாளிதழின் முதல் பக்கத்தில், புதிய முதல்வர் டி.கே. சிவகுமாரை அப்படியே சிவபெருமான் தோற்றத்தில் சித்தரித்து ஒரு கார்ட்டூன் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. தலையில் சடாமுடி, புலித்தோல் ஆடை, கையில் திரிசூலம் என அச்சு அசலாக கடவுள் சிவன் போலவே சிவகுமார் சித்தரிக்கப்பட்டு, அதற்கு “அரசியல்வாதிகளின் மத்தியில் ஒரு ருத்ரன்” என்ற தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல்களை சிவகுமார் திறம்பட சமாளித்ததைப் பாராட்டும் விதமாகவே நாளிதழின் தலைமை ஆசிரியர் விஸ்வேஷ்வர் பட் இதனை வெளியிட்டிருந்தார்.

   

ஆனால், இந்த அட்டைப்படம் வெளியான உடனேயே இந்து அமைப்புகளும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். அரசியல் ஆதாயத்திற்காகவும், ஐஸ் வைப்பதற்காகவும் ஒரு சாதாரண மனிதனைக் கடவுளோடு ஒப்பிடுவது சுத்தமான தெய்வ நிந்தனை என்று அவர்கள் சாடினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் கிரீஷ் பரத்வாஜ், அரசியல் காரணங்களுக்காக நம் கடவுள்களின் புனிதத்தைக் குறைக்கக் கூடாது என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார். மேலும், சில பேராசிரியர்களோ கடந்த 2019-ல் பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்த ஒருவரை எப்படி சிவபெருமானோடு ஒப்பிடலாம் என்று சிவகுமாரின் பழைய சிறை விவகாரத்தைத் தோண்டித் துருவி வறுத்தெடுக்கத் தொடங்கினர்.

   

முதல்வராகப் பதவியேற்றுப் பெருமிதத்துடன் வலம் வர வேண்டிய நாளில், இந்த “சிவன் கெட்டப்” கார்ட்டூன் சர்ச்சை டி.கே. சிவகுமாருக்குப் பெரிய தலைவலியாகவும் அவரது வரலாற்று நாளுக்கு ஒரு கரும்புள்ளியாகவும் மாறியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஆனாலும், இவ்வளவு பெரிய சர்ச்சை வெடித்த பிறகும் நாளிதழின் ஆசிரியரோ அல்லது முதல்வர் டி.கே.சிவகுமார் தரப்போ இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருவதுதான் தற்போது அம்மாநிலத்தின் மிக விவாதத்திற்குரிய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.