தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது இந்த கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்து விட்டதாக இபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக உடனான தொகுதி பங்கீடு குறித்து மௌனம் காத்து வருகின்றார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான 56 தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமித்ஷா வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை எடப்பாடி பழனிச்சாமிடம் எடுத்துச் சென்று காட்டிய நிலையில் மீண்டும் எஸ் பி வேலுமணி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது இவ்வளவு தொகுதிகள் எல்லாம் பாஜகவுக்கு ஒதுக்க முடியாது என இபிஎஸ் கூறிய தகவலை எஸ் பி வேலுமணி கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த அமித்ஷா டெல்லி சென்றதும் இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தார். அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளி சென்ற எடப்பாடி இரவு அமித்ஷாவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுக்கு 56 தொகுதிகள் வேண்டும் என்றும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமைத்தால் மூன்று அமைச்சர்கள் பதவிகளும் பாஜகவுக்கு வேண்டும் என்று கூறியதாக பரபரப்பு தகவல் டெல்லியில் இருந்து வெளியாகி உள்ளது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியது கிடையாது. தற்போது திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு வருவது போல அதிமுக கூட்டணியிலும் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பது அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
