தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ் புகழ் ஜூலி அவரை விமரிசித்து வெளியிட்டுள்ள புதிய காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்!” என்று தொடங்கும் அந்த வீடியோவில், தற்போதைய அரசின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புச் சூழலை ஜூலி தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
தேர்தல் பிரச்சார காலத்திலிருந்தே திமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் ஜூலி, தவெக மற்றும் விஜய் மீது தொடர்ச்சியான விமரிசனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடி நிலைகளைத் தனது காணொளியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, பெண்களுக்கு இந்த அரசு கொடுக்கும் பாதுகாப்பு இதுதானா? என்று கேட்டு விஜய்யை அவர் கடுமையாகத் சாடியுள்ளார்.
https://www.instagram.com/reel/DYt2ZAFT4OV/?utm_source=ig_web_copy_link
மேலும், சமீபத்தில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜூலி, எங்கு பார்த்தாலும் மரண ஓலமாகவே இருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விஜய் அரசுக்கு எதிராக அவர் எழுப்பியுள்ள இந்த விமரிசனம் இணையத்தில் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது.
