யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பலர் பிரபலமாகி வருகின்றனர். ஹர்ஷா சாய் ஹைதராபாத்தை சேர்ந்தவர். இவருக்கு 26 வயது ஆகிறது. கல்லூரி படிப்பை முடித்த ஹர்ஷா சாய் யூடியூப் சேனலை தொடங்கினார். முதலில் ஹர்ஷா சாய் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டதன் மூலமாக அவருக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் வர ஆரம்பித்தனர்.
இந்நிலையில் ஏழை குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுப்பது, ஏழை சிறுவனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, ஆயிரம் பேருக்கு பைக் டேங்க் ஃபுல் பெட்ரோல் போட்டு கொடுத்தது என ரசிகர்களை அடுத்தடுத்து ஈர்த்தார். இது மட்டும் இல்லாமல் ஒரு லட்சம் ஏழைகளுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ஹர்ஷா சாய் உணவு வாங்கி கொடுத்தார்.
மேலும் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் இருக்கும் சிறந்த ஹோட்டல்களில் இருந்து ஏழை மக்களுக்கு உணவை வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார். இவருக்கு 3 யூடியூப் சேனல்கள் இருக்கிறது. அதில் சுமார் 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். யூடியூப் மூலம் ஒரு மாதத்திற்கு ஹர்ஷா சாய் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மித்ரா சர்மா போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவரிடம் யூடியூபர் ஹர்ஷா சாய் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டி 2 கோடி ரூபாய் பணம் பறித்ததாகவும் நடிகை ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாகவே பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளில் ஏராளமான பிரபலங்கள் சிக்குகின்றனர். அந்த வகையில் ஹர்ஷா சாய் மீதும் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.