தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். அதனால் ‘கல்லைக் கூட மிகச்சிறப்பாக நடிக்க வைக்கக்கூடியவர் பாரதிராஜா’ என்று அவரைப் பற்றி பெருமையாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தன் மகனை அவரால் ஒரு வெற்றிகரமான நடிகராக உருவாக்க முடியவில்லை.
அப்பாவைப் போலவே இயக்குனர் ஆக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்த மகன் மனோஜைக் கட்டாயப்படுத்தி நடிகராக்கினார். அவரை பிரம்மாண்டமாக தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அந்த படம் ப்ளாப் ஆனது. மனோஜால் நடிகராக பெரியளவில் சாதிக்க முடியாமலேயே போனது. அதே போல இயக்குனராக வேண்டும் என்ற அவரது ஆசை சமீபத்தில் நிறைவேறினாலும் அவரால் சொல்லிக்கொள்ளும்படி அந்த துறையில் சாதிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடல் நேற்று அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நேற்று மாலை அவரது உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அப்போது மனோஜின் இரு மகள்களைக் கொண்டே அவருக்கான இறுதி சடங்குகளை பாரதிராஜா செய்யவைத்துள்ளார். வழக்கமாக ஆண்கள்தான் இந்த சடங்குகளை செய்வார்கள். ஆனால் பாரதிராஜா பேத்திகளை கொண்டு இந்த சடங்கை செய்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
