தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
அப்படி அவர் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் நடிகர் பாண்டியன். மண்வாசனை படத்துக்காக அவர் பாண்டியனை தேர்வு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான். மண்வாசனை படத்தின் கதாநாயகன் வீரய்யா பாத்திரத்துகு
ஒரு புதிய முகத்தை தேடி ஊர் ஊராக சென்று பலரையும் பார்த்துள்ளார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு யாரும் திருப்தியாக தோன்றவில்லை. அப்போதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். கோவிலை விட்டு வெளியே வரும்போது அங்கே ஒரு இளைஞர் வளையல் கடை வைத்திருந்தார். அவரை பார்த்ததும் பாரதிராஜாவுக்கு ஏதோ ஒரு பொறிதட்டியது. அந்த வாலிபருக்கும் பாரதிராஜாவை தெரிந்திருந்தது. அவர் பாரதிராஜாவுக்கு சோடா வாங்கி கொடுத்து கவனித்துள்ளார்.
அவரை காரில் ஏற்றிக்கொண்டு அவர் தங்கியிருந்த விடுதிக்கு போனார் பாரதிராஜா. அவரை ‘சிரி’ என்றார்.. ‘கோபப்படு’ என்றார்.. உடனே, இவர்தான் மண்வாசனை ஹீரோ என முடிவு செய்தார். அந்த வாலிபர்தான் பாண்டியன். இதை மண்வாசனை படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். மண்வாசனை படத்தின் மூலம் கவனம் பெற்ற பாண்டியன் அதன்பின் 85க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாண்டியன் நடித்தார்.
