“என் மகனை என்னால் வெல்ல முடியல”….. திமுகவில் இணைந்த மகனால் கண்ணீர்விட்ட தந்தை… எம்பி சுப்பராயனின் வைரல் பதிவு….!

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் அவர்களின் மகன் பாரதி சுப்பராயன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்த பாரதி சுப்பராயன் மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரின் மகன் தந்தை வழியை விடுத்து வேறொரு கட்சியில் இணைந்தது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் மனம் திறந்துள்ள எம்பி சுப்பராயன், தனது மகனின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “எனது விருப்பத்திற்கு நேர் எதிரான பாதையை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது வருத்தமளிக்கிறது; அவரை எனது பாதையில் வென்றெடுக்க இயலாது போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன்” என்று அவர் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனி உடைமை சமூக அமைப்பைத் தகர்த்துப் பொதுவுடைமை சமூகத்தைக் கட்டுவதே தனது பாதை என்றும், அந்த லட்சியப் பயணம் தனது மூச்சடங்கும் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழியிலேயே தொடரும் என்றும் திட்டவட்டமாக உறுதிபடக் கூறியுள்ளார்.

   

தமது பொது வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்றும், கமிஷன் மற்றும் ஊழல் போன்ற தீயவை தன்னை ஒருபோதும் அண்டியதில்லை என்றும் சுப்பராயன் சுட்டிக்காட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் நெறிமுறைக்கு மாறாகத் தான் எக்காலத்திலும் நடந்துகொண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழலில் எழுந்த அனைத்து நியாயமான விமர்சனங்களையும் தான் பணிவோடு ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்க மாட்டேன் என்றும், எந்தவிதமான இடர்ப்பாடுகளும் தன்னை நிலை குலைத்ததில்லை என்றும் அவர் தனது கம்யூனிஸ்ட் கொள்கைப் பிடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

   

தந்தை ஒருபுறம் சமத்துவப் பாதையான பொதுவுடைமைக் கொள்கையில் உறுதியாக நின்று தன் வாழ்நாளை அர்ப்பணித்து வரும் நிலையில், மகன் மற்றொரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இந்த நிகழ்வு தந்தை – மகன் உறவு மற்றும் அரசியல் கொள்கை முரண்களுக்கு இடையேயான ஒரு சுவாரஸ்யமான மற்றும் உணர்வுபூர்வமான விவாதமாக மாறியுள்ளது. கொள்கைக்கும் குடும்பத்திற்கும் இடையிலான இந்தச் சூழலில் சுப்பராயன் வெளிப்படுத்தியுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு அரசியல் அரங்கில் பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.