தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.

பாக்யராஜின் திரைவாழ்க்கை உச்சத்தில் இருந்த 1980 களில் அவரது முதல் மனைவி பிரவீனா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். அப்போதுதான் பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அந்த படத்தில் முதல்மனைவி இறந்தும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தையை வளர்க்கும் தந்தையாக பாக்யராஜ் நடித்திருப்பார்.
இந்நிலையில் அப்போது பாக்யராஜ் இரண்டாவதாக நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளார். அப்போது பாக்ய்ராஜின் நண்பர்கள் ‘இப்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் உங்கள் இமேஜ் பாதிக்கும்” எனக் கூறியுள்ளனர். ஆனால் பாக்யராஜோ “எனக்கோ அறிவுரை சொல்லி கட்டுப்படுத்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. நானே எனக்கு ஒரு கட்டுப்பாட்டை போட்டுக்கொள்ளவேண்டும். அதனால் நான் இப்போது திருமணம் செய்துகொள்வதுதான் சரி” என்று கூறி பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
