தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்யராஜை முன்னணி நடிகர் ஆக்கியது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கமே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
எம் ஜி ஆர் வேறு, தன்னுடைய கலையுலக வாரிசு என பாக்யராஜை அழைத்ததால் எம் ஜி ஆரின் ரசிகர்களும் அவருக்கு ரசிகர்களாக மாறினர். அப்போது அவருக்கு சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து நிலையான மார்கெட் இருந்தது. எம் ஜி ஆர் இறந்திருந்த சமயம், அப்போது பாக்யராஜ் கட்சியும் ஆரம்பித்திருந்தார்.
அந்த நேரத்தில்தான் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன மிஸ்டர் இந்தியா திரைப்படத்தை அவரை வைத்து எடுக்கலாம் என்ற முடிவை எடுத்தார் தயாரிப்பாளர் பாலாஜி. இந்தி படத்தின் பெரும்பாலான காட்சிகளை அப்படியே வைத்துக் கொண்டு பாக்யராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் புதிதாக ஷூட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பட உருவாக்கத்தின் போதே பாக்யராஜுக்கும் தயாரிப்பாளர் பாலாஜிக்கும் முட்டல் மோதல் உருவாகிவிட்டது. இந்த படத்தை பாக்யராஜ்தான் இயக்கினார் என சொல்லப்பட்டாலும் டைட்டிலில் அவர் பெயர் வராது. கே விஜயன் பெயர்தான் இயக்குனர் என்று வரும். ஒருவேளை தோல்வியை முன்பே பாக்யராஜ் கணித்துவிட்டாரோ என்னவோ?
படம் ரிலீஸாகி அட்டர் பளாப் ஆனது. பாக்யராஜ் நடித்த ஒரு படம் இந்தளவுக்கு தோல்வி அடையுமா என்ற அளவுக்கு இருந்தது அதன் தோல்வி. இதனால் தயாரிப்பாளர் பாலாஜி, தோல்விக்குக் காரணம் பாக்யராஜ் செய்த மாற்றங்கள்தான் என அவரை சுட துப்பாக்கியை எடுத்து நீட்டியதாகவெல்லாம் அப்போது செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் பாக்யராஜ் அவருக்கு நஷ்ட ஈடு கொடுத்தாக சொல்லப்படுகிறது.
