ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான சட்டப்போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கு சான்றிதழ் அளிப்பது குறித்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது கேவியட் (Caveat) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து படக்குழுவினர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு நியாயங்களையும் வாதங்களையும் கேட்ட பிறகே எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தணிக்கை வாரியம் வலியுறுத்தியுள்ளது.
திரைப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் தணிக்கை நடைமுறைகள் தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. படத்தை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கிய நிலையில், படக்குழுவினர் அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதைக் கணித்தே, ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது என்பதற்காக தணிக்கை வாரியம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீடு தணிக்கை வாரியத்தின் பிடிவாதத்தாலும், சட்ட விதிகளாலும் தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
