ASTROLOGY
எலுமிச்சை தீபம் ஏற்றுவது ஏன்…? எந்த நேரத்தில் ஏற்றினால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா…?
எலுமிச்சை பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அது காயாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அழுகினாலும் சரி அதன் புளிப்பு சுவை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை பழத்திற்கு தெய்வீக சக்திகளையும் நேர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும் தன்மை உண்டு.
கோவில்களில் சென்று வழிபடும்போது பலர் விளக்கு ஏற்றி வழிபடுவர். அதில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுவது என்பது மிக முக்கியமானதாகவும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. எலுமிச்சை விளக்கை ஏற்றுவதற்கு எலுமிச்சையை சரி பாதியாக நறுக்கி அதில் உள்ள சாறை பிழிந்து விட்டு உட்புற தோளை வெளிப்புறமாக திருப்பி கிண்ணம் போன்று ஆக்கி அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றுவார்கள்.
இப்படி எலுமிச்சை விளக்கை ஏற்றும் போது நம்மை பிடித்த கெட்ட நேரங்கள் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம். இது மட்டுமல்லாமல் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவது நம் சங்கடம் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்வழி பிறக்கும் என்று நம்பப்படுகிறது. எந்த நாட்களில் எலுமிச்சை தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இனி காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கேற்றுவதன் மூலம் நோய்கள் விரைவில் குணமடையும். செவ்வாய்க்கிழமை மாலை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் விலகும். தனிப்பட்ட மற்ற வேண்டுதல்கள் உடையவர்கள் வெள்ளிக்கிழமை காலை வேளையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு இரண்டு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது கைகூடும்.
அதுமட்டுமின்றி இந்த பிறவியில் நாம் தெரியாமல் செய்த சிறு தவறுகளும் பாவங்களும் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் மன்னிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடும்போது நம்முள் இருக்கும் கெட்ட எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் நமக்குள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.