“டிஃபன் பாக்ஸில் வந்த மாட்டுக்கறி… சுற்றிய வளைத்த 5 மாணவர்கள்.. தாயும், மகனும் அதிரடி கைது.. பள்ளிக்குள் நடந்த பகீர் சம்பவம்”..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சைகளும், அது சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள ஹப்ராகாட் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பயிலும் பள்ளி மாணவர் ஒருவர், தனது தாயார் சமைத்துக் கொடுத்தனுப்பிய மாட்டுக்கறி உணவைத் தனது டிஃபன் பாக்ஸில் எடுத்து வந்துள்ளார். வகுப்பறையில் இருந்த இரண்டு இந்து சக மாணவர்களை அந்த உணவைச் சாப்பிடுமாறு, அவரும் அவருடன் இருந்த மேலும் நான்கு மாணவர்களும் சேர்ந்து கொண்டு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மறுநாள் சனிக்கிழமை காலை வெளியே தெரியவர, பாதிக்கப்பட்ட இந்து மாணவர்களின் குடும்பத்தினர் கிருஷ்ணாய் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், சம்பந்தப்பட்ட அந்த மாணவனையும், அவனுக்கு மாட்டுக்கறி சமைத்துக் கொடுத்து அனுப்பிய அவனது தாயார் நூர் சாகிதா பேகத்தையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் குற்றச்சதி, மத உணர்வுகளைத் தூண்டி புண்படுத்துதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்ற நான்கு மாணவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

இச்சம்பவம் நடந்த கிருஷ்ணாய் மற்றும் கோல்பாரா பகுதிகள், கணிசமான முஸ்லிம் மற்றும் இந்து மக்கள் வாழும் பகுதியாக இருப்பதால், மிக எளிதாக வகுப்புவாத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, பள்ளிக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பதற்றம் தொற்றிக் கொண்டது. நிலைமை மோதலாக மாறுவதற்குள் கோல்பாரா மாவட்ட ஆணையர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் இந்த உடனடி மற்றும் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பதற்றம் அதிகரிக்காமல் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.