மகாராஷ்டிர மாநிலத்தில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த சஹில் லவ்ஹாரே என்ற இளைஞரும், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு ஒரு நபருடன் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சஹிலுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் கடும் கோபமடைந்துள்ளார். இது குறித்துப் பேசுவதற்காக நாசிக்கில் உள்ள வன்சம்பதா பகுதிக்கு வைஷ்ணவியை வரவழைத்த சஹில், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சஹிலின் மிரட்டலால் பயந்துபோன வைஷ்ணவி, உடனடியாகத் தனது வருங்கால கணவரைச் செல்போனில் தொடர்பு கொண்டு, சஹில் தன்னைத் தொந்தரவு செய்வதாகக் கூறி உதவி கேட்டுள்ளார். ஆபத்தை உணர்ந்த வைஷ்ணவியின் வருங்கால கணவர், செல்போன் இணைப்பைத் துண்டிக்காமல் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். சுமார் 22 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த பதற்றமான உரையாடல் திடீரென நின்றுள்ளது. அப்போது செல்போனை எடுத்த சஹில், “நான் வைஷ்ணவியைக் கொன்றுவிட்டேன்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வருங்கால கணவர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, வைஷ்ணவி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உறைந்துபோனார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து சஹிலைத் தேடியபோது, கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. வைஷ்ணவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சஹில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒருதலைப்பட்சமான ஆத்திரத்தாலும் விபரீத முடிவாலும் இரு இளம் உயிர்கள் பலியான இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
