குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதல்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து 7 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலால் இரு நாடுகளிலும் போர் அபாய எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலித்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். குவைத்தில் ஐந்து முறை சைரன் ஒலித்ததோடு, அந்நாட்டு வான் பாதுகாப்புப் படை ஈரானிய ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்திய அதிர்வு சத்தங்களும் நகர் முழுவதும் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குவைத் ராணுவம் மற்றும் பஹ்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஆகியவை தங்களது நாட்டு மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அவசர கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

பஹ்ரைனில் அமெரிக்காவின் மிக முக்கியப் பாதுகாப்புப் படையான 5-வது கடற்படைத் தலைமையகம் அமைந்துள்ளது. இந்தத் தலைமையகத்தை தங்களின் ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக வந்த ஈரானின் 4 ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதோடு, ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதலும் நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஈரான் தற்போது குவைத் மற்றும் பஹ்ரைன் மீது இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

   

இருப்பினும், அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் அழிக்கப்பட்டுவிட்டதாக ஈரான் கூறுவது முற்றிலும் பொய் என்று அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகமான சென்ட்காம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. தங்களின் ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, ஈரான் ஏவிய 7 ஏவுகணைகளில் 6 ஏவுகணைகளை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வான் பாதுகாப்புப் படைகள் நடுவானிலேயே துல்லியமாக எதிர்தாக்குதல் நடத்தி அழித்துவிட்டன என்றும், 7-வது ஏவுகணை இலக்கை அடையாமல் வழியிலேயே விழுந்துவிட்டதாகவும் சென்ட்காம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.