சென்னை மாவட்டம் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஃபைசல். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக ஃபைசல் டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்க்கும் சண்முகநாதன் என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் நாய்க்காக உணவு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை எடுத்துக்கொண்டு பைசல் சண்முகநாதனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது நாய் குரைத்துக் கொண்டே கடிக்க பாய்ந்ததால் பயந்து போன ஃபைசல் உணவை வீட்டு வாசலில் வைத்து விட்டு கீழே ஓடி வந்தார். பின்னர் சண்முக நாதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாய் கடிக்க வந்ததால் உணவை வாசலில் வைத்து விட்டதாக கூறி ஓடிபி கேட்டுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த சண்முகநாதன் ஓடிபியை சொல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் அந்த உணவை இரண்டாவது மாடியில் இருந்து கீழே நின்று கொண்டிருந்த ஃபைசல் மீது தூக்கி வீசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து சண்முகநாதன் ஃபைசலை அடித்துள்ளார். அப்போது ஃபைசலும் சண்முகநாதனை செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
