தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.

இந்நிலையில் தற்போது பாலா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பாலாவின் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் வணங்கான் படத்துக்காக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் பாலா ஏன் மாற்று மொழிகளில் படங்களை இயக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “சேது படத்தை இன்னொரு மொழியில் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதற்காக பாம்பேயில் போய் தங்கியிருந்தேன்.ஆனால் அந்த ஹீரோ ரெண்டு நாளாக வரவில்லை. அவர்கள் ஆட்டிட்யூட் எனக்குப் பிடிக்கவில்லை.
கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு 2 மணி வரை டூப்பை வச்சு எடு என்கிறார்கள். இந்த அக்கிரமம் எல்லாம் எனக்கு சரிபட்டு வராது என்பதால் அவர்கள் என்னைப் பார்க்க வந்த ஹோட்டலில் இருந்து கிளம்பிவிட்டேன். வந்து ரூம் சுவரைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று” எனக் கூறியுள்ளார். சேது படத்தை இந்தியில் சல்மான் கான் ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
