பத்ரிநாத் கோவிலா? கிளப்-ஆ?!… புனித பூமியில் அதிரவைத்த DJ மியூசிக்… கொதித்தெழுந்த அர்ச்சகர்கள்… கொதிக்கும் ஆன்மீக உலகம்….!!

By Gayathri on புரட்டாதி 24, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு அருகே சமீபத்தில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில், அதிக சத்தத்துடன் இசைக்கப்பட்ட ‘பஜன் ஜாமிங்’ மற்றும் டிஜே இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், பாடகி பிரியங்கா மெஹரின் நடன மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, புனிதத் தலத்தின் புனிதம் கெடுவதாகக் கூறி பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பத்ரிநாத் கோவிலின் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் இந்தச் செயலுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். பத்ரிநாத் தலம் விஷ்ணு பகவான் தியானம் செய்யும் அமைதியான இடமாகப் போற்றப்படுகிறது; அங்கு அமைதியைக் காக்க சங்கு ஊதுவது கூட தவிர்க்கப்படும் நிலையில், கேளிக்கை விடுதிகளைப் போன்று அதிக சத்தத்துடன் டிஜே இசையை ஒலிக்கச் செய்வதும் நடனமாடுவதும் முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என அர்ச்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆன்மீக மற்றும் தியான ஸ்தலங்களை சுற்றுலா மற்றும் கேளிக்கை மையங்களாக மாற்றுவது பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

   

இந்தக் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மாநில சுற்றுலாத் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முக்கியமாக ராணுவத்தின் ‘ஆபரேஷன் சத்பாவனா’ என்ற மக்கள் தொடர்பு திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், எதிர்காலத்தில் பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்களில் இதுபோன்று அதிக சத்தத்துடனான இசை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும், உள்ளூர் மரபுகள் மற்றும் ஆன்மீகச் சடங்குகளின் புனிதம் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் சுற்றுலாத் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.