கர்நாடக மாநிலம் ஹூப்ளி பனசங்கரி பகுதியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களைப் போலீசார் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் மிஷிர்கோட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தாதாபீர் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு மாருதி என்பவரைக் கொலை செய்த வழக்கு இருந்தது. பின்னர் அதில் சமரசம் ஏற்பட்டு தாதாபீர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் மாருதியின் உறவினர்கள் சிலர் தாதாபீரைச் சாலையில் பல நூறு மீட்டர்கள் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி தாதாபீர் கீழே விழுந்த நிலையில், மர்ம நபர்கள் இருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மனவேதனையைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கொடூர வன்முறை வீடியோக்களை இணையத்தில் பரப்ப வேண்டாம்” எனப் போலீஸ் ஆணையர் என். சசிகுமார் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். கொலையாளிகளைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
