தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.
பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. ஆனால் எம் ஜி ஆரை வைத்து வேலை வாங்குவது ஒரு சிலரால்தான் முடியும். அந்த அளவுக்கு அவர் சிக்கலான மனிதர் என சொல்லப்படுவதுண்டு.
ஆனால் எம் ஜி ஆரின் திரைவாழ்க்கை மேலும் மேலும் உச்சத்துக்கு சென்றதற்கு அவருடைய அண்ணனான எம் ஜி சக்ரபாணி ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார். எம் ஜி ஆரின் மேலாளர் போல செயல்பட்டு, அவருக்காகத் தயாரிப்பாளர்களிடம் பேசுவது, அவரின் ஷூட்டிங் ப்ரோகிராம்களை முடிவு செய்வது என அவர் கூடவே இருந்து அவரின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளார்.

#image_title
இதேபோலதான் சிவாஜிக்கு அவரது தம்பி வி சி சண்முகம். எம் ஜி ஆராவது குறைவான படங்களில் நடித்து அரசியலில் கொஞ்சம் கவனம் செலுத்தினார். ஆனால் சிவாஜியோ ஒரு நாளில் மூன்று வெவ்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரால் எந்த படமும் நின்றதில்லை, தாமதமானதில்லை என்றால் அதற்கு முழுக் காரணமும் அவருடைய தம்பி சண்முகம்தான் என்று சொல்வார்கள்.
அந்தளவுக்கு தெளிவாகத் திட்டம் திட்டுதல், சிவாஜியின் புதுப் படங்களுக்கான கதை கேட்டல், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பேசுதல் என சிவாஜியின் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டுள்ளார்.
